அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்: கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க முடிவு
அமெரிக்கா மற்றும் கனடா இடையே வொஷிங்டனில் நடைபெற்ற மூன்று நாள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கனடாவின் $20 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடு இன்று(22) அதிகாலை 12:01 மணிக்கு முடிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக கனடாவும் "டொலருக்கு டொலர்" என்ற அடிப்படையில் அதே அளவு வரியை விதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆதரவு நடவடிக்கை
அத்துடன், வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான புதிய ஆதரவு நடவடிக்கைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு கனடாவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புதிய வரியானது அமெரிக்காவிற்கான கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள், தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை இதனால் பெரிதும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை: நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு