கொழும்பில் பெருந்தொகை தங்கம், பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 2 கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம், பணம் கொள்ளை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் திருடிய பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அப்பிள் ரக 3 கையடக்கத் தொலைபேசிகளையும், மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியையும் கொள்வனவு செய்துள்ளார்.
மேலும், எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி வீட்டில் வசிப்பவர்கள் தமது உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
மறுநாள், 19ஆம் திகதி பீரிஸ் வீதியில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டை சோதனையிட்டபோது, மேல் மாடியில் அமைந்திருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளார். ஒரு கோடி ரூபா பணத்தையும், ஒரு கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அனைத்து தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருட்டில் ஈடுபட்ட நபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச் சென்ற சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.