இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது
இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.