கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனைகளை பெறவும்!விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு,கோவிட் மற்றும் இன்புளுவென்சா போன்ற நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் நோய்க்கான அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் அறிவிப்பு
மேலும்,மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறான நோய் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும்,வைத்திய ஆலோசனைகளை பெற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.