சுகாதாரத்துறைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு - வெற்றிடங்களை நிரப்ப இறுதிக்கட்ட பேச்சுகள்
நாட்டின் சுகாதாரச் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் போதியளவான மனித வளம் இல்லாமையே தற்போதைய பிரதான சவாலாகக் காணப்படுகின்றது என்றும், இதனால் சுகாதாரத் துறையில் நீண்டகாலமாக வெற்றிடமாக உள்ள பிரிவுகளுக்கான புதிய நியமனங்களை வழங்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
பேராதனை போதனா மருத்துவமனையில் 92 மில்லியன் ரூபா செலவில் நவீன உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரதான மருத்துவ ஆய்வகம் ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வரவு - செலவுத்திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு
"சுகாதாரத் துறையில் கடந்த அரசுகளினால் அரைகுறையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநடுவே கைவிடப்பட்ட அனைத்து மருத்துவமனை அபிவிருத்தித்திட்டங்களையும் மீள ஆரம்பித்து நிறைவு செய்வதற்காக, இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தரமான சுகாதாரச் சேவையைப் பொதுமக்களிடம் தங்கு தடையின்றி கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான மனித வளத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தற்போது வெற்றிடமாக உள்ள அனைத்துத் துறைகளுக்கும் தகுதிவாய்ந்தவர்களை ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, முதற்கட்டமாகத் தகுதிவாய்ந்த தாதியர்களை அதிகளவில் பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கான புதிய நியமனங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சுகாதாரச் சேவை நியமனங்களின் போது எவருக்கும் எவ்வித அரசியல் அநீதியும் இழைக்கப்பட மாட்டாது என்பதுடன், முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும்.
சுகாதாரத்துறையின் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு
மேலும், நிதியமைச்சுடன் விரிவாக கலந்துரையாடி, சுகாதாரத்துறையின் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கான முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட பேச்சுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நவீன உலகிற்கு ஏற்ப, ஏழை எளிய மக்களுக்கும் உயர்தரமான இலவச சுகாதாரச் சேவையை வழங்குவதே எமது அரசின் முதன்மைக் குறிக்கோளாகும்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளைப் பலப்படுத்துவதற்காகச் சுகாதார அமைச்சினுள் பிரத்தியேகமான தனிப் பணிப்பாளர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது என்றார்.




