ஆபத்தாக மாறியுள்ள டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, டெங்கு நோயாளர் முகாமைத்துவம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை
இதன்படி, டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை தாமதமுமின்றி, விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் நோயாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு நோயாளரும் தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரியின் நேரடி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், நோயாளர்கள் இரத்த மாதிரிகளைத் தாமதமின்றி வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை 41,144 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலைமை மேலும் அதிகரித்தால், மருத்துவமனை அமைப்பால் சமாளிக்க இயலாது என்று பல மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது டெங்கு வைரஸின் ஒரு புதிய வகை பரவி வருவதாகவும், குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மாறியுள்ளதாகவும் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடைமுறை
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் 17ஆம் திகதி வரை நகரங்கள், வடிகால் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன.
அதேபோல், 18ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் சுற்றுப்புற வளாகங்களும் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் நாளாக 19ஆம் திகதி பெயரிடப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளன.