வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மன்னார் நகர முதல்வரின் அவசர கடிதம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணரை உடனடியாக நியமிக்க கோரி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் டேனியல் வசந்தன் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (21.11.2025) அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் நிறுவனமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இயங்கி வருகிறது.
இருப்பினும், மாவட்ட பொது வைத்தியசாலையில் உரிய துறை சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான போதுமான வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையால் சிறிய விபத்து காயங்களுக்கும் மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு இடமாற்ற வேண்டியுள்ளது.
மயக்க மருந்து
இதனால் நோயாளிகளுக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையில் அதிருப்தி நிலை நீடித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டிருந்த மயக்க மருந்து வழங்கும் நிபுணர் இடமாற்றலாகி சென்ற நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை மன்னார் பொது வைத்தியசாலையில் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இந்த வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணரை உடனடியாக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றன.

இதன் மூலம் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர் உள்ளடங்களாக பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |