இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கல்வி அமைச்சருக்கு அவசரக்கடிதம்
2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, “தேசிய ரீதியில் பரீட்சை திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள்
எனினும் ஒதுக்கப்பட்ட மற்றும் அதற்கேற்ப வழங்குவதற்கென அனுமதிக்கப்படும் கொடுப்பனவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ள செலவினங்களை நோக்கும் போது வழங்கப்படும் கொடுப்பனவானது எவ்விதத்திலும் போதுமானது அல்ல.
பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியிலும் தமது கடமைகளைப் பொறுப்புணர்வுடன் செவ்வனே நிறைவேற்றிய ஆசிரியர்களுக்கு பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் பொறுப்பற்றுச் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
பொருளாதார நெருக்கடி
இன்று நிலவும் கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனம் தளராமல் கடமைகளை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக பொது மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு அதனால் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் கிளர்ந்து எழுந்து போராடிய போது அரசியல் வாதிகளின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறெனில் ஏன் ஆசிரியர்களுக்கு ஒதுக்க முடியவில்லை. இதனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வது சவாலாக அமையும்.
உரிய ஆசிரியர்களுக்கு உடனடியாக கொடுப்பனவு
நிதியை ஒதுக்குமாறும் அவ்வாறு செய்யாவிடத்து ஒன்றிணைந்த ஆசிரிய சங்கங்களாக
இது தொடர்பாக மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்போம்” என அக்கடிதத்தில்
வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




