மனித புதைகுழிகள் குறித்து உடனடி விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை
கொழும்பு துறைமுக வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித புதைகுழிகள் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது, தீர்க்கப்படாத பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்கள் மற்றும் கடந்தகால அரச வன்முறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
நேற்று (24) நீதி அமைச்சுக்குச் சென்ற மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான நுவன் போபகே ஊடகங்களிடம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
விசாரணை
மனித புதைக்குழிகள் தொடர்பான உண்மைகள் வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் நீண்டகால மோதல்கள் மற்றும் 1971, 1988–89 கலகங்களின் போது நடந்த கடுமையான ஒடுக்குமுறைகள் காரணமாகப் பரவலான கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் நிகழ்ந்தன.
வட மாகாணத்தில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
பொறுப்புக்கூறல்
துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகள் யாருடையது, அவர்கள் எவ்வாறு இறந்தனர், அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என நுவன் போபகே இதன்போது கேள்வி எழுப்பினார்.

இந்த எலும்புக்கூடுகள், கடந்தகால கிளர்ச்சிக் காலங்களில் காணாமல் போன ஜே.வி.பி உறுப்பினர்களின் கொலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
பலியானவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும், அரசாங்கம் தாமதமின்றி முழு அளவிலான, சுதந்திரமான விசாரணையைத் தொடங்கி உண்மைகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.