பொருளாதார நெருக்கடியால் வேலைக்கு அமர்த்தப்படும் பாடசாலை மாணவர்கள்
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயக் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட நகர மற்றும் தோட்டப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் பாடசாலை வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை அதிபர்கள் இது குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களை பெற்றோர் தொழில்களில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு பாடசாலை மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தரம் 9, 10 மற்றும் 11இல் கற்கும் மாணவர்களே அதிகளவில் பாடசாலைகளுக்கு வருகை தருவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள்
புத்தகங்கள், போக்குவரத்து செலவு மற்றும் உணவுப் பிரச்சினை காரணமாகவும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் சில மாணவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் 7 வீதமான மலையக பெருந்தோட்ட மாணவர்கள், பாடசாலைக்கு செல்வதில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



