இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் காலமானார். துனித்தின் தந்தையான சுரங்க வெல்லாலகே தனது 54 வது வயதில் காலமானார்.
இலங்கை அணி தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்று உள்ளது.
நேற்றைய தினம் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்களினால் வெற்றி ஈட்டியது.
போட்டி நிறைவடைந்ததன் பின்னர்
இந்த போட்டியில் துனித் வெல்லாலகே இலங்கை அணி சார்பிலான இறுதி பந்து ஓவரை வீசி இருந்தார்.
இதன் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நாபி தொடர்ச்சியாக துனித் வெல்லாலகேவிற்கு ஐந்து சிக்ஸர்களை அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இடை நடுவில் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
எனினும் இந்த விடயம் வெல்லாலகேவிடம் அறிவிக்கப்படவில்லை எனவும், போட்டி நிறைவடைந்ததன் பின்னரே அவரிடம் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி ஓவரில்
முதலில் தந்தைக்கு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டதாகவும் பின்னர் தந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெல்லாலகே நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசளிப்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாகவும் அணி வீரர்களும் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் இளம் வீரர் துனித் வெல்லாலகேவை ஆற்றுப்படுத்துவதில் அணி வீரர்கள் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டதனை காணொளிகளில் காண முடிகின்றது.
இதேவேளை, இறுதி ஓவரில் வெல்லாலகேவிற்கு ஐந்து சிக்ஸர்களை விளாசிய முகமது நபிக்கும் இந்த மரண சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் தொடர்பில் அவர் அதிர்ச்சி அடையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரண செய்தியை கேள்வியுற்ற நாபி தனது எக்ஸ் தளத்தில் துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் வலுவாக இருங்கள் சகோதரரே என அவர் குறிப்பிட்டுள்ளளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



