அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய ஆசிரியர் நியமனத்தில் அநீதி : அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம் குற்றச்சாட்டு
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய ஆசிரியர் நியமனத்தில் இழைக்கப்பட்ட அநீதி குறித்து கண்டும் காணாமல் செயற்படும் அரசியல்வாதிகளை நாங்கள் கண்காணித்து வருகின்றோம் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என குறித்த ஒன்றியத்தின் தலைவர் க.அனிரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஊடக அமையத்தில் இன்று (29.12.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
திசைமுகப்படுத்தப்பட்ட நேர்முக தேர்வுகள்
கடந்த அரசாங்கம் 53,000 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஒரு வருட பயிற்சியின் அடிப்படையில் நியமனம் வழங்கி இருந்தது.
அதன் போது ஒவ்வொரு பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் அனைத்து அபிவிருத்தி உத்தியோத்தர்களும் அந்தந்த பிரதேச செயலகத்தில் பணிக்காக அமர்த்தப்பட்டார்கள்.
இவ்வாறான காலகட்டங்களில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் பல ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்டது.
இது குறித்து மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் இணைந்து அவர்களை பாடசாலைகளில் காணப்படுகின்ற பாட வெற்றிடங்களுக்கு ஏற்ற வகையில் கல்வி தகமைகளுக்கு ஏற்றவாறு திசைமுகப்படுத்தப்பட்ட நேர்முக தேர்வுகளை நடத்தி அந்த பாட வெற்றிடங்களுக்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்தாலும் அந்தந்த பாடசாலைகளில் அவர்களை ஆசிரியர் பயிற்சியாளர்களாக இணைத்து இருந்தார்கள்.
அவ்வாறு இணைக்கப்பட்டு இப்போது மூன்று வருடங்களை கடந்த நிலையில் பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நேர்முக தேர்வு ஒன்றின் ஊடாக அவர்களுக்குரிய ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க வேண்டும்.
இதற்காக அந்தந்த மாகாண பொது சேவை ஆணைக்குழுவினால் நேர்முக தேர்வுக்கான விண்ணப்ப கோரப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பங்கள் திடீரென இடைநிறுத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு
பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய ஆசிரியர் நியமனத்தின் போது இழைக்கப்பட்ட அநீதி குறித்து அகில இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் சார்ந்து இரு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம்.
அதனடிப்படையில் தேசிய ரீதியாக இடம்பெறவிருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்திற்கான போட்டி பரீட்சை பட்டதாரி ஒன்றியம் சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தது.
எனவே, குறித்த ஊடக சந்திப்பில் கூறப்பட்டிருக்கின்ற விடயங்களை கவனத்தில் கொண்டு இதற்குரிய அதிகாரிகள் எவ்வளவு விரைவாக இதற்குரிய தீர்வுகளை பெற்றுத் தர முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த தீர்வுகளை பெற்று தர வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




