முள்ளியவளையில் மக்கள் பாவனைக்கு கொண்டு வரப்படாத பொது சந்தைக் கட்டடம்
முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை பொதுச் சந்தைக்குரிய புதிய கட்டடம் ஒன்று இது வரையும் மக்கள் பாவனைக்கு கொண்டு வரப்படாத நிலையில் உள்ளது.
நான்கு கடைகளுக்கான ஒரு கட்டடத் தொகுதியாக முள்ளியவளை பொதுச் சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத் தொகுதி கட்டி முடிக்கப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாது பூட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதை அவதானிக்கலாம்.
இக்கடைகள் மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையில்லை என்றால் அதற்கென நிதியை ஒதுக்கீடு செய்து கட்டடங்களை அமைத்துக்கொண்டு அவற்றை பூட்டி வைப்பதென்பது ஆரோக்கியமான நகர்வாக இருக்காது.
கட்டுமானப் பணிகள்
அப்படியொரு வகையில் மக்களுக்கான தேவைப்பாடு இருக்குமெனில் அது கட்டி முடிக்கப்பட்டு உடன் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படல் வேண்டும்.
இந்நிலையில், பொதுச்சந்தைக் கட்டடங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் போது வாடகை பெறப்படும் என்பதால் அது சார்ந்த பிரதேச சபைகளுக்கும் இத்தகைய கட்டடங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கும் போது வருமானமும் வந்து சேரும்.
ஆயினும், இவைகள் பற்றி பிரதேச சபை சிந்திக்கவில்லை போலும் என சமூகவிட ஆய்வாளர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
முள்ளியவளை பொதுச் சந்தைக்குரிய இக்கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக உள்ளூர் மேம்பாட்டு ஆதரவுத் திட்டம் ஊடாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது.
இதற்கான, ஒப்பந்தத் தொகையாக சுமார் 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் கடந்த 20.09.202 முதல் ஆரம்பிக்கப்பட்டு 07.03.2023 அன்றுடன் நிறைவுறுத்தப்படுவதாக திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொருத்தமான திட்டம்
திட்டமிடல்களின் படி, வேலைகள் முடிவடையாது சற்றுத் தாமதமாகியே வேலைகள் முடிவடைந்ததாக முள்ளியவளை பொதுச் சந்தையுடன் பரிச்சயம் உள்ள பலருடன் உரையாடியதன் மூலம் அறிய முடிகிறது.
அதேவேளை, குறித்த கட்டடத்தின் வேலை ஒப்பந்த இலக்கம் LDAP/NP/MU MPPS/2022/04 ஆகும்.
முள்ளியவளை பொதுச் சந்தைக்குரிய இக்கட்டடத் தொகுதி பொருத்தமான திட்டமாக இருந்த போதும் விரைவான பயன்பாடற்ற தன்மை கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
மிகப்பொருத்தமான திட்டமிடல்களூடாக நடைமுறைக்கு வரும் செயற்பாடுகளை உரிய காலத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது தான் அந்த முயற்சி சமூகங்களிடையே எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினால் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்கும் நிதியின் மூலம் முள்ளியவளையில் சிறந்த உட்கட்டுமானங்களை உருவாக்கி அவற்றை பயனுடைய மாதிரிகளாக பயன்படுத்தி நல்ல விளைவுகளை எட்ட முடியும் என சமூக விட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |