திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் (Photos)
நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது திருகோணமலை வளாக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் அபயபுர சுற்றுவட்ட சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஆண்டாங்குளம், திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஊடாக நான்காம் கட்டை சந்தியை வந்தடைந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டதுடன், “இலங்கைக்கு சரியான நீதி வேண்டும்”, “நாட்டில் பெட்ரோல் டீசல் இல்லை”, “மின்சாரம் இல்லை”, “ராஜபக்ச ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்”, “நாங்கள் பயணிப்பதற்கு வீதி வேண்டும்”, “அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும்”, மற்றும் “மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்” என்ற கோஷங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து நான்காம் கட்டை சந்தியினை ஆர்ப்பாட்டம் வந்தடைந்தது.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் மிக்க அரசியல்வாதிகளே காரணம் என நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள் என அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,
இன்றைய தினம் இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் முன்னெடுத்த மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரகை வீசி மாணவர்களை தாக்கி ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலிஸ் அதிகாரிகளின் அடாவடித்தனம் அரசாங்கத்தின் சர்வாதிகாரம் என்பன முழு உலகத்திற்கும் தற்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறான அமைதி ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினரை ஏவி ஆர்ப்பாட்டங்களை கலைக்க முயற்சிக்கும் குறித்த அரசாங்கம் விரைவில் தமது பதவிகளை இராஜினாமா செய்து வீடு செல்ல வேண்டுமெனவும் இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியான முறையில் நாடு தழுவிய பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



