பல்கலைக்கழக திருத்தச் சட்டம் : அரசாங்கத்தின் நகர்வு குறித்து சஜித் குற்றச்சாட்டு
1978 ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டம் இற்குத் திருத்தம் கொண்டுவரும் அரசாங்கத்தின் நகர்வு, ஜனநாயகமற்ற முறையிலும் வெளிப்படைத்தன்மை இன்றியும் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பல்கலைக்கழக கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் முறையான கட்டமைப்புசார் ஆலோசனைகளை மேற்கொள்ளாமல் இவ்வளவு முக்கியமான மாற்றங்களைச் செய்வது தவறானது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு முன்னரே
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களை கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கும் தற்போதைய நடைமுறையை நீக்கிவிட்டு, அந்த அதிகாரத்தை துணைவேந்தர் அல்லது ஆளும் சபை வசம் ஒப்படைக்கும் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துணைவேந்தருக்கு இத்தகைய தனிப்பட்ட அதிகாரத்தை வழங்குவது அல்லது அதிகாரத்தை மத்தியமயமாக்குவது, ஏற்கனவே பதற்றங்களை எதிர்கொள்ளும் உயர்கல்வித் துறையில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு முன்னரே, பீடாதிபதிகள் நியமனத்தை நிறுத்துமாறு துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்றும், இந்தக் கட்டளைக்குச் சட்ட அடிப்படை இல்லை என்றும், இது தற்போதுள்ள சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறையின் வீழ்ச்சியையும், நாட்டை அதிகாரத்துவ முடிவெடுக்கும் திசையை நோக்கி நகர்த்துவதையும் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கம் இந்தத் திருத்த செயல்முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அதிகாரத்தைக் குவிக்காமல் அல்லது பங்குதாரர்களின் பங்கேற்பைக் குறைக்காமல், ஆதாரங்களின் அடிப்படையிலான நியாயமான சீர்திருத்தங்களுக்காகப் பரந்த ஆலோசனைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |