இலங்கை யுத்தத்தில் நடந்த பாலியல் வன்முறைகள்.. சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
இலங்கையில் மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் உட்பட சில சர்வதேச அமைப்புக்கள் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையில், "இக்குறிப்பு, மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) மற்றும் பிற ஐக்கிய நாடுகள் (UN) அமைப்புகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடாத்திய விசாரணைகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பத்து வருட ஆய்வு
அத்துடன், மோதல்களின் போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் பரவலானதும் திட்டமிடப்பட்டதுமாக இருந்தமையினையும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அரசின் தொடர்ச்சியான தோல்வியினையும் பதிவு செய்துள்ளது.

பெருமளவில் அறியப்படாத விடயமான, தண்டனையின்மையினால் உயிர்பிழைத்தவர்கள் நடைமுறை வாழ்வில் அனுபவிக்கும் தொடர் துன்பங்கள் மனஅழுத்தம் மனரீதியான வேதனை களங்கம், அச்சம், திணிக்கப்பட்ட மௌனம், மறுதலிப்பு மற்றும் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமை ஆகியவற்றால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை இக் குறிப்பு முன்வைக்க விரும்புகிறது.
உயிர்பிழைத்தவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு. அமைப்புசார் தோல்விகளை துன்பத்துடன் தொடர்புபடுத்துவதுடன், பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளை முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளையும் இக் குறிப்பானது முன்வைக்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.