யாழில் மக்களோடு தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த ஜனாதிபதி அநுர
பொங்கல் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் கிளம்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட “பொங்கல் விழா“ இன்று (15) வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டுள்ளார்.
இதன்போது, பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பொங்கல் நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து, வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் "பொங்கல் சங்கமம்" எனும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் சுற்றுலாப்பணியகத்தின் கண்காட்சியையும் பார்வையிட்டார்
இதனையடுத்து அங்கு நடைபெற்ற பொங்கல் கலைநிகழ்வுகளையும் கண்டு களித்துள்ளார்.
ஜனாதிபதி நேரில் கலந்து கொள்வது
எமது தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் தைப்பொங்கல் பண்டிகையில், நாட்டின் ஜனாதிபதி நேரில் கலந்து கொள்வதானது, எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதோடு, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அம்சமாகவே அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தைப்பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஈடுஇணையற்ற, தனித்துவமான ஒரு பண்டிகையாகும். இது வெறும் வழிபாட்டுடன் நில்லாது, எமது பண்பாடு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு திருநாளாகும்.
தமிழ் மக்களின் இந்தத் தனித்துவமான பண்டிகையை, எம்மோடு இணைந்து கொண்டாடுவதற்காக ஜனாதிபதி இங்கு வருகை தந்திருப்பது, அவர் தமிழ் மக்களின் கலாசாரத்தின் மீது கொண்டுள்ள நன்மதிப்பையே காட்டுகின்றது. இதற்காக எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்திகள்
யாழ் வேலனையில் ஜனாதிபதி அனுரகுமாரா திசா நாயக்காவின் காலடி பட்டமை அங்கு வாழும் மக்களின் துன்பங்கள் வெகு விரைவில் நீங்கி விடும் என்பதற்கான அறிகுறி என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிகளை போல் அல்லாது நாட்டினுடைய மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களை தேடி எமது அரசாங்கத்தின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறான ஒரு அபிவிருத்தி திட்டத்தில் வேலனையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்காக அண்மையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டி இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.







ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri