தமிழ் மக்களுடைய விவகாரம் வேணடுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது!: யோதிலிங்கம்
தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை வெளிவந்துள்ளது. இது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
”மேற்குலகம் பெருந்தேசியவாதத்துடன் முரண்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மக்களைத் தனியாக பயணிக்க விடாது தனித் தன்மையைத் துறந்து சிங்கள லிபரல்களுடன் இணைந்து பயணிக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
சுமந்திரன் இதற்காகத் தான் களமிறக்கப்பட்டார். இம்முயற்சி ஒரு போதும் வெற்றிகளைக் கொடுக்கப் போவதில்லை.
தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள்
தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்கள் சற்றுக் குறைவு தான். தென்னிலங்கை விவகாரங்களே அதிகளவில் வந்துள்ளன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பலவீனம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீள் பிரயோகம், மாணவ தலைவர்கள் கைது செய்யப்படல் என்பன பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் பற்றி கூறிய விடயங்களில் பொறுப்புக் கூறல் பற்றிக் கூறிய விடயம் தான் மிகவும் முக்கியமானது.
தேசிய மட்டத்தில் பொறுப்புக் கூறலுக்கான முன்னேற்றம் தோல்வியடைந்த நிலையில் பொறுப்புக் கூறலையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கான சர்வதேச மட்டத்திலான அணுகுமுறைகளை பேரவையின் உறுப்பு நாடுகள் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.
ஆனால் எத்தகைய அணுகுமுறைகள் என எதையும் அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை.
முன்னைய அறிக்கை ஒன்றில் பேரவைக்கு வெளியே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளின் நீதி முறைப்படியும் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்தத் தடவை உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளில் விசாரிக்க வேண்டும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.
இலங்கை இராணுவம்
இது தவிர வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்றும் இராணுவம் வசமுள்ள அனைத்துத் தனியார் காணிகளையும் உரிய தரப்பினரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்றும் தனது பரிந்துரையில் கூறியிருக்கின்றார்.
தமிழ் மக்கள் தற்போது சந்திக்கின்ற ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் பற்றியோ அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியோ எதுவும் கூறவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை இன அழிப்பிற்குப் பொறுப்புக் கூறல் பிரச்சினை.
ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிப்பறிப்பு விவகாரம். உட்பட இயல்பு நிலையை கொண்டு வருதல் பிரச்சினை, சிறப்புக் கவனிப்பை வேண்டி நிற்கின்ற போரினால் பாதிக்கப்பட்டோர் உட்பட சாதாரண மக்கள் எதிர் நோக்கும் அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இப் பிரச்சினைகள் ஆணையாளரின் அறிக்கையில் போதியளவு பிரதிபலிக்கப்படவில்லை. தமிழர் விவகாரம் மேலோட்டமாகவே அணுகப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
மேலும் மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமை, பொருளாதாரக் குற்றங்கள், மிதமிஞ்சிய ஊழல் மோசடிகள் என்பவற்றையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணங்களாக அடையாளப்படுத்துகின்றார்.
உண்மையில் இவை உப காரணங்களே ஒழிய பிரதான காரணங்கள் அல்ல.
பிரதான காரணம் வரலாற்று ரீதியான இன ஒடுக்குமுறையே, இந்தக் காரணம் மிச்செல் அம்மையாருக்கு தெரியாது எனக் கூற முடியாது. இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
இன ஒடுக்கு முறையே காரணம் எனக் கூறினால் பெருந் தேசியவாதத்துடன் முரண்பட வேண்டி வரும். இது மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் பூகோள புவிசார் நலன்களுக்கு எதிரானதாக இருக்கும் என்பதனாலேயே பிரதான காரணி தவிர்க்கப்பட்டுள்ளது எனக் கூறலாம்.
இன ஒடுக்குமுறையை ஏற்றுக் கொண்டால் நிலைமாறு கால நீதி பொருத்தமானதாக இருக்காது. பரிகார நீதியே பொருத்தமானதாக இருக்கும்.
மேற்குலக இந்திய சக்திகள் அதற்குத் தயாராக இல்லை. இவற்றை விட ஆணையாளரின் அறிக்கையை நுணுக்கமாக அவதானித்தால் இலங்கை விவகாரங்களை மனித உரிமை விவகாரங்களாக அவர் பார்ப்பதே தெளிவாகத் தெரியும்.
தமிழர்களுடன் தொடர்புடைய மனித உரிமை விவகாரங்களாக பார்க்கப்பட்டவை தற்போது முழு இலங்கைத் தீவுக்குமான மனித உரிமை விவகாரங்களாகப் பார்க்கப்படுகின்றன.
தென்னிலங்கை விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஜெனிவா
இது வரை காலமும் ஜெனிவா விவகாரம் என்பது தமிழர்களுடன் தொடர்புடைய விவகாரமாகவே பார்க்கப்பட்டது. தற்போது தென்னிலங்கை விவகாரம் பெரிதாகக்காட்டப்படுகின்றது.
சுருக்கமாகக் கூறின் சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் பெரிய கோடு கீறப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தமிழர் விவகாரம் பற்றிய பேசு பொருளை சர்வதேச மட்டத்தில் கீழிறக்குவது தான்.
இந்த இடத்தில் தான் ஜெனிவா பற்றி சில கோட்பாட்டு முடிவுகளை தமிழ்த்தரப்பு எடுப்பது அவசியமானது.
அதில் முதலாவது தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்மானங்களை எடுக்காவிட்டாலும் ஜெனிவா தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச களம் என்பதை தமிழ்த்தரப்பு மறக்கக்கூடாது.
இதனால் ஜெனிவா தமிழ் மக்களுக்கு சாதகமாகத் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கூறுவதை விட தமிழ் மக்களின் விவகாரத்தைப் பேசு பொருளாக்கக் கூடிய ஒரு மேடை என்றே அதனைக் கருதுதல் வேண்டும்.
அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஏறத்தாழ இலங்கை நாடாளுமன்றத்தினை ஒத்த நிலையை ஜெனிவா கொண்டுள்ளது எனலாம்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு தமிழ்ப் பிரதிநிதிகள் செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஆனால் தமிழ் மக்களின் விவகாரத்தை பேசு பொருளாக்கக் கூடிய மேடையாக நாடாளுமன்றம் இருக்கின்றது.
அதே வேளை மக்கள் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தையும் பெறக்கூடியதாக இருக்கும். எனவே ஜெனிவா பற்றி அதீத கற்பனைகள் தேவையற்றது.
ஜெனிவா
இரண்டாவது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஜெனிவாவில் ஆதிக்க நிலையில் உள்ளது. மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு சற்று சுயாதீனம் இருந்தாலும் அவரும் அவ் ஆதிக்கத்திற்கு மட்டுப்பட்டவர் தான்.
எனவே தமிழ் மக்கள் தொடர்பாக மேற்குலகம் என்ன அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றதோ அதுவே தமிழர் பற்றிய தீர்மானங்களாக இருக்கும்.
இலங்கைத்தீவு பற்றிய விவகாரங்களில் மேற்குலம் இந்தியாவுடன் இணைந்து செல்வதால் மேற்குலக இந்திய கூட்டு நலன்களே மனித உரிமைகள் பேரவையின் தமிழர் பற்றிய தீர்மானங்களாக இருக்கும் எனக் கூறலாம்.
எனினும் மேற்குலகத்தையும் இந்தியாவையும் கையாள்வதற்கும் தமிழ் மக்களுக்கும் பல பிடிகள் உள்ளன. அந்தப் பிடிகளை வலுவான இராஜதந்திரத்துடன் கையாள்வதற்குத் தமிழ்த்தரப்பு தயங்கக் கூடாது.
அதில் பிரதானமானது இலங்கைத்தீவை மையமாகக் கொண்ட பூகோள அரசியலும் புவிசார் அரசியலுமாகும்.
பூகோள அரசியல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்ன் இருப்புக்கு அவசியமானது. புவிசார் அரசியல் பிராந்திய வல்லரசான இந்தியாவின் இருப்புக்கு அவசியமானது.
உலகலாவிய வகையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக்கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக கேந்திர மையமாக இருக்கும் இலங்கைத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பிரதானமாக துணை புரியப்போவது இலங்கைத் தமிழர்கள் தான். தமிழர்கள் மட்டும் தான் தற்போது இலங்கை ஆட்சி அதிகாரக்கட்டமைப்புக்கு வெளியில் நிற்கின்றனர்.
மேற்குலகம் பெருந்தேசியவாதத்துடன் முரண்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மக்களைத் தனியாக பயணிக்க விடாது தனித்தன்மையைத் துறந்து சிங்கள லிபரல்களுடன் இணைந்து பயணிக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
சுமந்திரன் இதற்காகத் தான் களமிறக்கப்பட்டார். இம்முயற்சி ஒரு போதும் வெற்றிகளைக் கொடுக்கப் போவதில்லை. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களும் இது போன்றது தான்.
கேந்திரப்பிரச்சினைக்கு அப்பால் இந்திய தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை தான் இந்தியாவிற்கு முக்கியமானது. இந்தியாவும் பெருந்தேசிவாதத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்காகவே தமிழர்களின் நலன்களை பின் நிலைக்கு தள்ளி சிங்கள லிபரல்கள் மூலம் முன் செல்லலாம் என நினைக்கின்றது எனினும் அது தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவியுள்ளது.
இவற்றை விட புலம்பெயர் மக்கள் மேற்குலகத்தைக் கையாளக்கூடியவர்களாக உள்ளனர். தமிழக மக்கள் இந்திய மத்திய அரசைக் கையாளக்கூடியவர்களாக உள்ளனர்.
சர்வதேச சமூகத்தில் வல்லரசுகள் சிறிய அரசுகள் மனித உரிமைவாதிகள்
முற்போக்கு ஜனநாயக சக்திகள், ஊடகவியலாளர்கள் என்பவற்றை உள்ளடக்கிய சர்வதேச
சிவில் சமூகம் என்பன உள்ளன. சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் சர்வதேச
சிவில் சமூகம் வலுவான பங்களிப்பை வழங்குகின்றது.
கவனமாகக் கையாண்டால் சர்வதேச சிவில் சமூகம் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருக்கும். சர்வதேச அபிப்பிராயத்தை புறந்தள்ளி வல்லரசுகளினால் பெரியளவிற்கு செயற்பட முடியாது. நான்காவது புலம்பெயர் மக்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கிடைத்த மிகப் பெரும் வளமாகும். இந்த வளத்தை கவனமாக ஒருங்கிணைத்து உச்ச வகையில் செயற்படுத்த வேண்டும்.
இன்று தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் சில அடைவுகள் கிடைத்திருக்கின்றது என்றால் அதற்குப் புலம்பெயர் மக்களே காரணமாவார். கனடா மத்திய அரசின் இன அழிப்புத் தீர்மானம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
ஜெனிவா களத்தையும் கூட சற்றுச்சூடாக வைத்திருப்பவர்கள் புலம் பெயர் மக்களே. ஜெனிவா தமிழ் மக்களுக்கு சாதகமாக இன்னமும் வராவிட்டாலும் தமிழத்தரப்பு தொடர்ந்து கதவுகளைத் தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும்.
சீனா இலங்கைத் தீவில் இருந்து அகலும் வரை ஜெனிவா கோவையை மேற்குலகம்
மூடப்போவதில்லை. சுருங்கக் கூறின் சடலம் தற்போதைக்கு அடக்கத்திற்கு செல்லாது” என தெரிவித்துள்ளார்.