ஐ.நா அமைப்பின்(CMW) குழுத் தலைவராக பிரசாத் காரியவசம் தெரிவு
ஐக்கிய நாடுகளின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் (CMW) தலைவராக முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் தூதுவருமான பிரசாத் காரியவசம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள பெலஸ் வில்சனில் (Palais Wilson) கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற இக்குழுவின் 42ஆவது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது அவர் இந்த பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
தலைவர் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் கருத்துத் தெரிவித்த தூதுவர் காரியவசம்,
தற்போதைய மனித உரிமைகள் துறையில் உள்ள சவால்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட சூழலில் குழுவின் எதிர்காலப் பணிகளுக்கு அதிக மூலோபாய அணுகுமுறை (Strategic Approach) தேவை என்று குறிப்பிட்டார்.
ஒரு தசாப்த கால அனுபவமும் அர்ப்பணிப்பும்
2023 ஜூன் மாதத்தில் இக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரியவசம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதன் தலைவராகப் பணியாற்றுவார்.
2004ஆம் ஆண்டில் இக்குழு தொடங்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராகப் பணியாற்றியதும் இவரே என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இதுவரையில் அவர் இக்குழுவில் நான்கு தடவைகள் பணியாற்றியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சர்வதேச தரங்களை வகுக்கும் செயல்பாட்டில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஆரம்பகால "பொதுக் கருத்துக்களை" (General Comments) வரைவு செய்வதில் அவர் நேரடியாகப் பங்களித்துள்ளதுடன் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பரந்த அனுபவத்தையும் கொண்டுள்ளார்.