இந்தியாவின் மருத்துவ கழிவுகள் எமது நாட்டின் கடல் வளங்களுக்கு ஏற்படுத்தும் பெரும் ஆபத்து!
இலங்கை கடற்கரையில் அண்மைக்காலமாக இந்தியாவின் மருத்துவ கழிவுகள் அதிகமாக கரையொதுங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற தகவமைப்புத் திட்ட (United nations climate change Adaptation plan)ஆலோசகர் போராசிரியர் டப்ளியு எம்.விமலசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் சென்னை பகுதிகளிலே அதிகமான வைத்தியசாலைகளின் மருத்துவ கழிவுகள் கடலில் சூட்சுமமாக விடப்படுகிறது.இது பல காலமாக மேற்கொள்ளப்படுகிறது.
இன்றைய நிலையில் குறித்த கழிவுகள் அதிகமாக வெளியேற்றப்படுவதாக எம்மால் உணர முடிகின்றது. கடலில் ஏற்படும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காற்றுகளால் மன்னார் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை உள்ள கடற்கரைகளில் இந்த மருத்துவ கழிவுகள் கரையொதுங்கின்றன.
ஆபத்துக்கள்
இது தொடர்பில் இலங்கை சூழலியலாளர்களும் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.அண்மைக்காலங்களில் ஊடகங்களில் கூட பலவாறான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த கழிவுகளில் ஊசிகளும் காணப்படுகிறது.
பல கழிவுகள் கடல் மண்ணில் புதையுண்டு போவதால் வெளியில் தெரிவதில்லை.இவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் அருதியிட்டு கூற முடியாததாகும்.பலவாறான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும்.
இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (Marine Environment Protection Authority)உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகள் சர்வதேச சூழல் பாதுகாப்பு சட்டங்களை கடைபிடிப்பதில்லை.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எமது நாடு சிவப்பு பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.ஏனென்றால் இவ்வாறான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும் என தெரிவித்துள்ளார்.



