செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்காமல் சென்ற ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பலரும் எதிர்பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் செம்மணி விஜயம் நடைபெறவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம்(02.09.2025) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழர் தரப்பு ஏமாற்றம்
முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் ஜனாதிபதி செம்மணிக்கு விஜயம் செய்வார் எனக் கூறியிருந்தார்.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை என பொது ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றும் போது, செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ஜனாதிபதியின் செம்மணி நோக்கி பயணம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அங்கு செல்லாமல் அதனை கடந்து சென்றமை தமிழர் தரப்பை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள மக்களிடத்தில் இருவகையான போக்கு காணப்படுகின்றது.
சில தரப்பினர் செம்மணி பெரும் அழிவு என்றும், செம்மணி மனித புதைகுழி, அதில் புதையுண்டவர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் பெரும்பான்மையானோர் செம்மணி தொடர்பில் எதிரான மன நிலையிலேயே இருக்கின்றனர்.
இனவாதம்
இவ்வாறான நிலையில், இலங்கையில் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்திப் படைத்த சிங்கள மக்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயமும் அநுரவுக்கு ஏற்பட்டிருப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் வாக்குகளையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கு காணப்படுகின்றது.
எனவேதான், செம்மணியை சென்று பார்வையிட்டால் சிங்கள மக்களிடத்தில் அது சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி ஜனாதிபதி செம்மணியை தவிர்த்து விட்டுச் சென்றிருக்கலாம் என்று அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.
இதேவேளை, இன்றையதினம் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு இனவாதம் குறித்து கதைத்திருந்தார்.
தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதம் குறித்து பேசி மக்களை திசைதிருப்ப முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், இனவாதத்தை முற்றிலும் ஒழிக்க எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயார் என அவர் உறுதியளித்திருந்தார்.
இவ்வாறிருக்க, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள தமிழர்களின் படுகொலை நடந்த இடத்தில் ஜனாதிபதி இறங்காமல் சென்றது அவரின் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
காணொளி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



