இலங்கயில் மீண்டும் மின்வெட்டு அபாயம் குறித்து எச்சரிக்கை
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரியை தொடர்ந்து நாட்டிற்குள் இறக்குமதி செய்தால், இந்த நிலையைத் தவிர்க்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாட்டை வந்தடைந்த மூன்று நிலக்கரி கப்பல்களில், முதலாவது கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு கப்பல்களில் உள்ள நிலக்கரியின் தர பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால், மின்நிலையங்களில் மின்சார உற்பத்தித் திறன் கணிசமாக குறைவடைகிறது என தெரிவித்துள்ளார்.
அந்த குறையை ஈடுசெய்ய, அரசு தனியார் டீசல் மின்நிலையங்களிலிருந்து உயர் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் எனுவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர்ச்சியான நிலையற்ற தன்மையின் காரணமாக, எதிர்காலத்தில் நாடு மீண்டும் மின்வெட்டு நிலைக்குத் தள்ளப்படும் கடும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.