இங்கிலாந்துக்கான இலங்கையர்களின் விசா விண்ணப்பங்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட தகவல்
இங்கிலாந்துக்கு(England) வந்த பின்னர் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அந்த நாட்டு அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச செய்தித்தாளொன்றில் முதன்முதலில் வெளியிடப்பட்ட, புதிய உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், வேலை மற்றும் படிப்புக்காக இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புகலிடம் கோருபவர்கள்
சட்டப்பூர்வமாக வேலை அல்லது படிப்பு விசாக்களில் இங்கிலாந்துக்கு வந்து பின்னர் புகலிடம் கோருபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இருப்பதாக இங்கிலாந்தின் அமைச்சர்கள் நம்புகின்றனர் இது வழங்கப்பட்டால், அவர்கள் நாட்டில் நிரந்தரமாக தங்க அனுமதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்தநிலையில், முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் புதிய குடியேற்ற வெள்ளை அறிக்கை, உடைந்த குடியேற்ற முறையை மீட்டெடுக்க ஒரு விரிவான திட்டத்தை வகுக்கும் என்று உள்துறை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபரங்களின் துல்லியம் குறித்த மதிப்பாய்வு காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் விசாக்களில் உள்ளவர்களுக்கான வெளியேறும் புள்ளிவிபரங்களை உள்துறை அலுவலகம் வெளியிடவில்லை.
குடியேற்ற விதிகள்
எனவே எந்த நாட்டினரின் விசாக்கள் காலாவதியாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு மாணவராக இங்கு வந்து விரைவாக புகலிடப் பாதைக்கு ஒருவர் மாறினால், அது புதிய சட்டத்தின்கீழ் துஸ்பிரயோகமாகும். எனவே அரசாங்கம் இதனை குறைக்க முயற்சிக்கிறது என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வேலை மற்றும் படிப்பு விசாக்களில் வந்து புகலிடம் கோரும் வெளிநாட்டினரின் துஸ்பிரயோகத்தைத் தடுக்க, குறித்தவர்களை விரைவாகவும் அடையாளம் காணும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நாட்டின்; குடியேற்ற விதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய போக்குகளைக் கண்டறிந்தால், நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று உள்துறை அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம், இங்கிலாந்துக்கு வர விரும்பும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்ட்ஸில் இலிருந்து 38,700 பவுண்ட்ஸாக உயர்த்தியது.
அத்துடன், பராமரிப்பு ஊழியர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதைத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |