தனியார் துறையினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு?
தனியார் துறையினருக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2022 முதல் ஒரு வருட காலத்திற்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவை அரசப்பணியாளர்களுக்கு வழங்க ஏற்கனவே அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் முன்னணி தொழிற்சங்கத் தலைவர்கள் தனியார் துறையினருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென முன்மொழிந்தனர்.
தனியார் துறை முதலாளிகள் இவ்வாறான மாதாந்த கொடுப்பனவை வழங்க மறுக்கும் பட்சத்தில், அது தொடர்பான சட்டமூலமொன்றை முன்வைக்குமாறு இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் லெஸ்லி தேவேந்திரா பரிந்துரைத்தார்.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் (FTZGSEU) இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், நாட்டின் பொருளாதாரம் வெற்றிபெற, தனியார் துறை முதலாளிகள் தொழிலாளர் அமைச்சரின் முன்மொழிவுக்கு இணங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியத்துடன் சேர்த்து ரூ.5,000 கொடுப்பனவும் வழங்க வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.பி.விஜயகுமார் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்