கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி பார்சல் (Photos)
மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் கோழிப்புரியாணி பார்சல் வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டு. போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள் சம்பவதினமான நேற்று விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்புரியாணியை வாங்கியுள்ளனர்.
வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரித்த நிலையில் இருந்துள்ளது.
முறைப்பாடு பதிவு
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்துள்ளார்.
திடீர் சோதனை நடவடிக்கை
மேலும், நேற்றைய தினம் பொது சுகாதார அதிகாரிகள் நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு பாவனைக்கு உதவாத 25 அரிசி மூடைகள் கைப்பற்றியதுடன் சுகாதாரமில்லாத பல உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுகாதாரமற்ற முறையில் செயற்பட்டுவந்த பல கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதன் போது இரண்டு பிரிவுகளாக பொது சுகாதார அதிகாரிகள் உணவங்களை
முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது ஒரு உணவகங்களை சோதனையிட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுகாதார பரிசோதனை மேற்கொண்டுள்ளனரா மற்றும் உணவங்கள் சிற்றுண்டிகள் உட்பட அனைத்தும் சோதனையிட்டபோது அங்கு ஒரு உணவகத்தில் பாவணைக்கு உதவாத 25 அரிசி மூட்டைகளை கைப்பற்றியதுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ஏனைய உணவகங்களை முற்றுகையிட்டபோது அங்கு சுகாதாரமற்ற முறையில் பல உணவங்கள் செயற்பட்டுவந்ததை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெறும் அதேவேளை சுகாதாரம்
பேணப்படாது மனித பாவணைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்தஉணவகங்களுக்கு எதிராக கடும்
சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.







