சொகுசு வாகனத்தில் வீடு சென்ற பாதாள உலகப் புள்ளி
போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்து (Kudu Salindu) எனும் பாதாள உலகக்கும்பல் புள்ளி சொகுசு வாகனத்தில் வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடு சலிந்து எனும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கடந்த 2023 மார்ச் மாதம் 15ஆம் திகதி மடகஸ்காரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாணந்துறை பிரதேசத்தில் பரபரப்பு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நீண்ட விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் வர்த்தகம், மனிதப் படுகொலை மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் நேற்றைய தினம் அவர் பாணந்துறை நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்கு வௌியே வந்த குடு சலிந்து, கறுப்புக் கண்ணாடி பொருத்திய சொகுசு வாகனத்தில் ஏறி தனது ஆதரவாளர்கள், சட்டத்தரணிகள் சகிதம் பேரணியாக வீடு திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொலிஸார் மற்றும் குடு சலிந்துவின் வாகனத்தில் ஏறிச் சென்ற சட்டத்தரணிகள் ஆகியோர் மீதும் பொதுமக்கள் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |