புலனாய்வுத்துறை அதிகாரிகள் போர்வையில் சென்ற மர்ம நபர்கள் - ஏழாவது தடவையாக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறிச் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத்துறை அதிகாரிகள் போர்வையில்..
குறித்த முறைப்பாடு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் கருத்து தெரிவிக்கையில்,
நான் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கோரப்பட்டதாகக் கூறி, நான் இல்லாத நேரத்தில் என் வீட்டிற்குச் சென்று எனது மனைவியிடம் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறி மூன்று மர்ம நபர்கள் தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

அவ்வாறு வீட்டிற்கு வந்தவர்கள் முச்சக்கரவண்டியில் வந்ததாக கூறப்படுகின்றது.
ஏழாவது தடவையாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த அச்சுறுத்தலுக்காக முறைப்பாடை பதிவு செய்ய கனகராயன் குளம் பொலிஸ் நிலையம் சென்ற போது, அங்கு எனது முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாது என பொலிஸார் மறுப்பு தெரிவித்தனர். நீண்ட விவாதத்தின் மத்தியில் எனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளேன்.
கடந்த 2011க்குப் பின்னர் ஏழாவது தடவையாக இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறேன்.
அச்சுறுத்தல்களாலும் எங்கள் பயணத்தை தடுக்க முடியாது. அநுர அரசுக்கும் மற்றைய அரசுகளுக்கும் தமிழின அடக்கு முறையில் வித்தியாசம் இல்லை என்பதே இந்த சம்பவம் உணர்த்துகின்றது என்றார்.