காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள்! ஐ.நா. குழுவில் தீவிர கரிசனை
வலிந்து காணாமல் ஆக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த 22 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் கடந்த 26 - 29 ஆம் திகதி வரை இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் இலங்கை சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அந்த அலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இந்த விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பில் இருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தனர்.
சர்வதேச பிரகடனம்
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்படல்களில் இருந்து சகல நபர்களையும் பாதுகாத்தல் தொடர்பான சர்வதேச பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான அரச சட்டங்கள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்திய விசேட அறிக்கையாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளியிட்டனர்.
குறிப்பாக அங்கு கருத்துரைத்த வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பான குழுவின் பிரதித் தலைவரும் இணை அறிக்கையாளருமான ஒலிவியர் டி ப்ரொவில், வலிந்து காணாமல் ஆக்கப்படல்களால் இலங்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 1980 மற்றும் 1990 களிலும், 2009 ஆம் ஆண்டு வரையான போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அத்தகைய சம்பவங்கள் பதிவானதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்படல்களில் இருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தில் கையெழுத்திட்டமை, இந்த விவகாரம் சார்ந்த தேசிய சட்டங்களை உருவாக்கியமை மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபித்தமை என்பன உள்ளடங்கலாக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றும், விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்படல் தொடர்பான சட்டமானது சர்வதேச பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெரிதும் உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று அண்மைய சில வருடங்களில் வலுகட்டாயமாகத் தடுத்துவைக்கப்படல் மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, குறித்த காலம் தடுத்து வைக்கப்படல் உள்ளிட்ட குறுங்கால வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் ஆகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான தடுத்து வைப்புக்களைப் பொலிஸார் முடிவுக்குக் கொண்டு வருவதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அடுத்தாகக் கருத்துரைத்த இணை அறிக்கையாளர் கார்மென் ரோஸா வில்லா குயின்ரனா, வலிந்து காணாமல் ஆக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அரசின் கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்படுவதாகவும், இவ்வாறான சில சம்பவங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு பொலிஸார் மறுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.



