மட்டக்களப்பு பிரதேசத்தில் பதற்றம்! நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை இன்று வியாழக்கிழமை (2) மாணவர்கள் பாடசாலை முன் கதவை பூட்டி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் எவரும் உட்செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தரம் 11ற்கு கல்வி கற்று வந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
முறைப்பாடு
அதேவேளை அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாது இருந்து வருகின்றதுடன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றது.
இது தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை ஒரு தீர்வும் இல்லை.
அதிபர் இடமாற்றம்
இந்த நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர்.
இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை எனவே எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரைக்கும் பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 7.00 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த போராட்ட இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு நாடாமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்து உணவு வழங்கி வரும் பெண் ஒருவர் தான் கடந்த 7 வருடங்களாக அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதாகவும் குறித்த அதிபர் என்னிடம் ஒரு மாணவருக்கு 5 ரூபா வீதம் மாதம் 15 ஆயிரம் ரூபா தருமாறு கோரி நான் 35 ஆயிரம் ரூபா கொடுத்தேன் அதற்கு நன்கொடை என ஒரு பற்று சீட்டில் எனது பெயரும் மற்ற பற்றுச்சீட்டு எனது சகோதரியின் பெயர் இட்டு தந்துள்ளார்.
ஆர்ப்பாட்டகாரர்களுக்கு உறுதி
கடந்த 5ம் மாதம் 10ம் 11 ம் ஆண்டு மாணவர்களுக்கு 62 ஆயிரம் ரூபா பணத்தை ஒரு ஆசிரியருக்கும் தெரியாமல் தருமாறு கோரியுள்ளார்.
அது எனக்கு மிகவும் கவலை என தெரிவித்ததையடுத்து உடனடியாக சம்மந்தப்பட்ட வலயக்கல்வி பணிப்பாளரின் கதைப்பதுடன் இங்கு நடந்துள்ளவை தொடர்பாக குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்வதாகும் அதன் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி சென்று மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கிருந்து பதில் வரும் வரை அவர் இன்று தொடக்கம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக அங்கு மாற்றுவதாகவும் உத்தரவாதம் அளித்ததையடுத்து பகல் 12.00 மணிக்கு மாணவர்கள் கதவை திறந்து உட்செல்ல அனுமதித்தனர்.
இதையடுத்து கல்வி பணிப்பாளர் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டு பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையா வண்ணம், அதிபரை தற்காலிகமா குறித்த பாடசாலையிலிருந்து வலயக் கல்வி அலுவலகத்திற்கு மாற்றியதுடன், குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரை, பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படுவரை பொறுப்பாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டதுடன் நாளை முதல் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் வழமை போல நடக்கும் என முடிவு எட்டப்பட்டது.



