ஐ.நாவின் முதல் வரைபு வெளியானது! கானல்நீரான தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட முதல் வரைபு வெளியாகியுள்ளது இதில் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்கள் உள்வாங்கப் படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இவ் அறிக்கை தெடர்பில் தெரிய வருவதாவது...
முதல் நகல் வரைபில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் சர்வதேச பொறுப்புக் கூறும் பொறிமுறை குறித்த தமிழ் மக்களின் வேண்டுகோள் ஓரளவும் ஏற்றுக் கொள்ளப் படாத விதத்தில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை எதிர்கால விசாரணைகளில் பயன்படுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழர் தரப்பால் மிகவும் எதிர் பார்க்கப் பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகள் போக்குவரத்து தடைகள் போன்றவற்றை விதிக்குமாறும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து எதனையும் புதுப்பிக்கப்பட்ட வரைபு குறிப்பிடப்படாமை தமிழர் தரப்பிற்கு பெரும் ஏமாற்றம்
இலங்கையில் தமிழர்கள் முஸ்லீம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுவது சிவில சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவது ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை பொதுமக்கள் நினைவுகூறுவது மீதான கட்டுப்பாடுகள் - நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகளும் புதிய வரைபில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் மனித உரிமை ஆணையகம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய வலுவான விதத்திலும் சுதந்திரமாகவும் செயற்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்ற விடயமும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் இடம்பெற்றுள்ளது.
ஒரு தசாப்தம் கடந்த நிலையில் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளும் உள்வாங்கப் படாமை தமிழர் தரப்பின் கோரிக்கைகள் மீண்டும் கானல்நீராகியுள்ளமை அவதானிக்க முடிகிறது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.