லைமனில் உக்ரைன் கொடி ஏற்றப்பட்டது - உறுதிப்படுத்தினார் ஜெலென்ஸ்கி
ரஷ்ய துருப்புக்கள் நகரை விட்டு வெளியேறியதை அடுத்து, உக்ரேனியக் கொடி லைமனில் பறக்கிறது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று மாஸ்கோவில் நடந்த விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இணைக்கப்பட்ட உக்ரைனிய பிராந்தியங்களில் ஒன்றான டொனெட்ஸ்கில் லைமன் நகர் அமைந்துள்ளது.
எனினும், சனிக்கிழமையன்று, உக்ரைன் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்களை சுற்றி வளைத்ததாகவும், அதன் படைகள் நகரத்திற்குள் இருப்பதாகவும் தெரிவித்தது.
லைமனில் உள்ள அனைத்து ரஷ்ய துருப்புக்களும் கைப்பற்றப்பட்டதாகவோ அல்லது கொல்லப்பட்டதாகவோ உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்தது.
இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது
எனினும், மாஸ்கோ தனது துருப்புக்கள் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரவு நேர உரையில் உக்ரைன் ஜனாதிபதி, "உக்ரேனியக் கொடி ஏற்கனவே டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள லைமனில் பறப்பதாக உறுதிப்படுத்தினார்.
எனினும், "அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது." எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வரும் நாட்களில், உக்ரேனிய படைகள் மேலும் பல நகரங்களை விடுவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் வடக்கில் தனது நடவடிக்கைகளுக்காக ரஷ்யா லைமனை ஒரு தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக பயன்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.