உக்ரைன் போரில் புதிய புரட்சி: தரைவழி ரோபோக்களைக் களமிறக்கும் இராணுவம்
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன் இராணுவம், போர்க்களத்தில் வீரர்களின் இழப்பைக் குறைக்கும் வகையில் தரைவழி ட்ரோன்களை (UGV) தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றது.
வடகிழக்கு உக்ரைனின் ஹோர்கிவ் பிராந்தியத்தில் உள்ள முன்னணி இராணுவப் பாசறைகளில், "ஹைனா" என அழைக்கப்படும் நான்கு சக்கர ரோபோக்கள் வெடிபொருட்களுடன் எதிரிகளின் தற்காப்புப் பகுதிகளை நோக்கி அனுப்பப்பட்டுத் தாக்குதல் நடத்தப்படுகின்றன.
அத்துடன், வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதற்கும், காயமடைந்த வீரர்களை மீட்பதற்கும், எதிரிப் படைகளின் மீதான துப்பாக்கிப் பிரயோகத்திற்கும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய புரட்சி
ஆளில்லா வான்வழி ட்ரோன்களுடன் இணைந்து செயற்படும் இந்தத் தரைவழி ரோபோக்கள், நவீன போர்க்களத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைனிய இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடப்பாண்டின் இறுதிக்குள் முன்னணிப் போர்ப் பிரிவுகளில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியை இவ்வாறான ரோபோக்கள் மூலம் மாற்றீடு செய்ய உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கடப்பதிலும் கட்டடங்களைச் சுத்தப்படுத்துவதிலும் சில தடங்கல்களை எதிர்கொண்டபோதிலும், அபாயகரமான பணிகளில் இருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்தத் தானியங்கி ரோபோக்கள், எதிர்காலப் போர் உத்திகளையே மாற்றியமைக்கும் எனக் கருதப்படுகின்றது.