உலக சந்தையில் உச்சம் தொட்ட எரிபொருள் விலை
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உச்சம் தொட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
மத்திய கிழக்கின் முக்கிய கடல்சார் கப்பல் போக்குவரத்து பாதைகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நீண்டகால தடங்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் விளைவாக வெள்ளிக்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் அளவீடான பிரெண்ட் விலை பீப்பாய் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது.

வியாழக்கிழமை 6 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைப் பதிவு செய்த பின்னர், வெள்ளிக்கிழமை ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பீப்பாய்க்கு 109.97 டொலர் வரை உயர்ந்தது. இது கடந்த மே மாதத்திற்குப் பின்னர் விலை மிக அதிகளவில் உயர்ந்த சந்தர்ப்பமாகும்.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய் ஒன்றுக்கு 100 டொலர் என்ற அளவுக்கு மேல் நீடித்து வருகிறது. இவ்விரு கச்சா எண்ணெய் குறியீடுகளும் இந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 13% வரை உயர்ந்துள்ளன.
இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு பதிவான மிகச் செங்குத்தான வாராந்திர விலையேற்றமாகும். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் மற்றும் அப்பகுதியில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், ஏமனின் மொகா துறைமுகத்தை ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் கைப்பற்றியதை அடுத்து, செங்கடல் பகுதியிலும் அச்சம் பரவியுள்ளது.
எரிசக்தி ஏற்றுமதிக்கு பயன்படும் மற்றொரு முக்கிய கடல்சார் பாதையிலும் தடங்கல்கள் ஏற்படலாம் என்ற கவலை இதனால் அதிகரித்துள்ளது.
ஐந்து ஈரான் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் தங்களது பதிலடி இன்னும் தீவிரமாக இருக்கும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகத் தடங்கல்கள் குறுகிய காலத்தில் தணியாமல் நீடிக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் அஞ்சுவதால் சந்தையில் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையின் இந்த அதிரடி உயர்வு உலகளாவிய பணவீக்கம் குறித்த கரிசனைகளையும் அதிகரித்துள்ளது.