ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகர் மீது உக்ரைன் நடத்திய வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென் பீட்டர்ஸ்பர்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உக்ரைன் இராணுவம் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் (மின்னணு வான்விமானம்) தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் புகழ்பெற்ற வருடாந்திர பொருளாதார மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள லெனின்கிராட் பிராந்தியத்தில் மட்டும் உக்ரைனின் 140க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மாகாண ஆளுநர் அலெக்சாண்டர் துரோஸ்தென்கோ தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் காரணமாக இராணுவ முகாம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதக் கிடங்குகள்
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக, சென் பீட்டர்ஸ்பர்க் நகர மக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு நகர ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் அறிவுறுத்தியுள்ளார்.

இத்தாக்குதல் குறித்துப் பேசிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, தங்களது நாட்டின் ட்ரோன்கள் சுமார் 1,000 கிலோமீட்டர் (620 மைல்கள்) தூரம் பயணித்து, ரஷ்ய கடற்படையின் முக்கிய தளமான குரோன்ஸ்டாட்டில் உள்ள ஆயுதக் கிடங்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் கொடுத்த தகுந்த பதிலடி இது என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வர நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்த அடுத்த நாளே இத்தாக்குதல் நடந்துள்ளது.
உக்ரைனுடன் போர்நிறுத்தம் செய்வது அவர்கள் மீண்டும் தங்களை பலப்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும் என்றும், ரஷ்யாவின் இலக்குகள் நிறைவேறும் வரை போர் ஓயாது என்றும் புட்டின் பொருளாதார மாநாட்டில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் இராணுவ தளவாட விநியோகச் சங்கிலியை முடக்கும் நோக்கில் உக்ரைன் இந்த அதிரடித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.