பிரித்தானியாவில் முடங்கியது ரயில் சேவை - மில்லியன் கணக்கானோர் பாதிப்பு
மிகப்பெரிய ரயில் வேலைநிறுத்தத்தின் தொடக்கத்தில் பிரித்தானியா முழுவதும் உள்ள பயணிகள் வழக்கத்தை விட நீண்ட நேர பயணங்களை எதிர்கொண்டுள்ளதுடன், சாலைப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐந்தில் ஒரு பகுதி ரயில் மட்டுமே சேவையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், RMT (National Union of Rail, Maritime and Transport Workers) மற்றும் ரயில்வே முதலாளிகள் புதன்கிழமை புதிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
எனினும், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிக வேலைநிறுத்தங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடி காணப்பட்டன நிலையங்கள்
நெட்வொர்க் ரெயிலில் பணிபுரியும் ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்கத்தின் சுமார் 40,000 உறுப்பினர்கள் மற்றும் 13 ரயில் இயக்குநர்கள் திட்டமிட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்காட்லாந்து, வேல்ஸ், கார்ன்வால் மற்றும் டோர்செட் மற்றும் செஸ்டர், ஹல், லிங்கன் மற்றும் வொர்செஸ்டர் போன்ற இடங்கள் உட்பட, அனைத்து வழித்தடங்களிலும் பாதி மூடப்பட்டதுடன், நாட்டின் பெரும்பகுதிக்கு ரயில் சேவை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை லண்டன் நிலகீழ் வழித்தடங்களில் வேலைநிறுத்தங்கள் நடந்ததால், பொதுவாகப் பயணிகளால் நிரம்பி வழியும் பல நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நெட்வொர்க் நிறுத்தப்படுவதற்கு முன்பு, ரயில் மூலம் வேலைக்குச் சென்ற பயணிகள் தங்கள் கடைசி ரயில் பயணங்களை எதிர்கொண்டனர்.
புதன்கிழமையும் இதன் பாதிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இரவு நேர பணியாளர்கள் இல்லாததால் சில இடங்களில் முதல் ரயில்கள் நான்கு மணிநேரம் வரை தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சாதாரண சேவைகளில் 60 வீதம் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.