பிரித்தானியவில் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அடுத்த வாரம் ரயில் மற்றும் டியூப் ரயில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதை தொழிற்சங்கத் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரயில் இயக்குநர்கள், Network Rail உள்ளிட்ட தரப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT) தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த வேலைநிறுத்தம் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், வேலைநிறுத்தங்கள் என்பது எப்போதும் கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய் அன்று லண்டன் டியூப் ரயில் வேலைநிறுத்தம்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய இந்த தொழிற்சங்க நடவடிக்கை செவ்வாய், வியாழன் மற்றும் எதிர்வரும் சனிக்கிழமைகளில் 13 ரயில் இயக்குநர்கள் மற்றும் நெட்வொர்க் ரயில் முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செவ்வாய் அன்று லண்டன் டியூப் ரயில் வேலைநிறுத்தம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் ஏனைய நாட்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, வேலைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து குறித்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரயில்களில் பயணிக்க வேண்டாம்
இதேவேளை, வேலை நிறுத்தம் காரணமாக தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில் சேவைகள் 07:30 மணி முதல் 18:30 மணி வரை முன்னதாகவே தொடங்கி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்த நாட்களில் ரயில்களின் இறுதிப் புறப்பாடுகள் வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.