பதவி விலக மறுக்கும் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்: வெஸ் ஸ்ட்ரீட்டிங்குடன் சந்திப்பு
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அமைச்சர்களின் பதவி விலகலால் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தனது சொந்தக் கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போதிலும், நாட்டைச் சீரமைக்கும் பணிகளைத் தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
தனது தலைமைக்கு சவாலாகக் கருதப்படும் சுகாதாரத் துறைச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்கை பிரதமர் ஸ்டார்மர் இன்று(13.5.2026) சந்தித்துப் பேசினார்.20 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தச் சந்திப்பு, ஒரு அதிகாரப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
பதவி விலகல்
வெஸ் ஸ்ட்ரீட்டிங் பதவி விலகல் செய்துவிட்டு, தலைமைப் பதவிக்கான போட்டியில் குதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மியாட்டா ஃபான்புல்லே மற்றும் ஜெஸ் பிலிப்ஸ் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் ஸ்டார்மர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தங்களது பதவிகளில் இருந்து விலகுகின்றனர்.
குறிப்பாக, கடந்த வாரத் தேர்தல் முடிவுகள் பேரழிவைத் தந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய பிரதமர் தேர்வு
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், மன்னர் சார்லஸின் நாடாளுமன்ற உரை நிகழ்வில் பிரதமர் ஸ்டார்மர் பங்கேற்க உள்ளார்.

வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் மருத்துவமனை காத்திருப்புப் பட்டியலைக் குறைத்தல் போன்ற 35-க்கும் மேற்பட்ட புதிய மசோதாக்களைத் தனது அரசு தாக்கல் செய்யும் என அவர் அறிவித்துள்ளார்.
இருப்பினும், ஸ்டார்மர் பதவியில் நீடிப்பாரா அல்லது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்குறி பிரித்தானிய அரசியலில் நீடிக்கிறது.