இலங்கையின் போர்க்குற்றங்கள் : நேரடி சாட்சிகளை அழைக்கும் இங்கிலாந்து பொலிஸார்
இலங்கையில் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் இங்கிலாந்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர், தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் டொமினிக் மர்பி (Commander Dominic Murphy) தெரிவித்துள்ளார்.
சாட்சியங்கள்
தமது விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த மிகக் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளின் முன்னேற்ற செயற்பாடுகளின் அடையாளமாக இது கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அனைத்து தீவிரமான வழக்குகளைப் போலவே, வழக்கைத் தொடர்ந்து கட்டமைக்க முடிந்தவரை நேரில் பார்த்த சாட்சியங்கள் தேவை.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நடந்த இந்த சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு இங்கிலாந்து பொலிஸார் கோரியுள்ளனர்.
விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித் தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் குறிப்பாக 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் அல்லது அந்த நேரத்தில் இலங்கையில் வசித்த உறவினர்கள் அல்லது நண்பர்களைக் கொண்டிருந்தவர்கள் இந்த தகவல்களை வழங்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போர்க் குற்றங்கள்
தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பவும் SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. அல்லது +44 (0)800 789 321 என்ற இலக்கங்களின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியன்று தெற்கு லண்டனில் உள்ள முகவரியில் 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியின் போது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் (Mylvaganam Nimalarajan) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் 48 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டு சம்பவங்களும் 2017ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு போர்க் குற்றங்கள் குழுவிற்கு செய்யப்பட்ட குற்றங்களாகும். இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இங்கிலாந்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |