ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி பாகிஸ்தானை சேர்ந்தவர்களா..! வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவின் பிரதமராகியுள்ள ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி மட்டும் தான் பிரிட்டிஷ் இந்தியாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
குஜ்ரன்வாலா
மல்யுத்த கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற குஜ்ரன்வாலா, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து சுமார் 1.5 மணிநேரத்தில் உள்ளது.
பிரிவினைக்கு முன், ரிஷியின் தாத்தா பாட்டி குஜ்ரன்வாலாவில் வாழ்ந்தபோது, நகரம் குறைந்தது ஏழு வாயில்களால் சூழப்பட்ட ஒரு இடமாக இருந்தது.
இப்போது அந்த இடம் குஜ்ரன்வாலா நகரமாக (பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா) அறியப்படுகிறது.
1930களின் முற்பகுதியில் வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இரத்தக்களரி காரணமாக குஜ்ரன்வாலா பகுதி மக்கள் எல்லையின் இருபுறமும் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
கலவரத்தின் போது, ரிஷியின் தந்தைவழி தாத்தா ராம்தாஸ் சுனக், 1935இல் குஜ்ரன்வாலாவை விட்டு வெளியேறி நைரோபியில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மனைவி, சுஹாக் ராணி சுனக், 1937இல் கென்யாவுக்குச் செல்வதற்கு முன், குஜ்ரன்வாலாவிலிருந்து தனது மாமியாருடன் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளார் என தெரியவருகிறது.
சுஹாக் ராணி மற்றும் ராம்தாஸுக்கு ஆறு குழந்தைகள், மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்.
நைரோபியில் பிறந்துள்ள ரிஷியின் தந்தை
இதில் ரிஷியின் தந்தை யஷ்வீர் சுனக் 1949இல் நைரோபியில் பிறந்துள்ளார். யஷ்வீர் 1966இல் லிவர்பூலுக்கு குடிபெயர்ந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார்.
1977இல், யஷ்வீர் லீசெஸ்டரில் உஷாவை மணந்துள்ள நிலையில் ரிஷி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 இல் சவுத்தாம்ப்டனில் பிறந்துள்ளார்.
இந்த நிலையில் ரிஷி சுனக்கைப் பற்றி பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் சிலர் அவர் மீது உரிமை கோருமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.
என்ற போதும் இந்தியர்கள் அவரை இந்திய வம்சாவளி என்று உரிமை கோருகின்றனர்.
மேலும், ரிஷியின் மனைவி இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.