இலங்கை தொடர்பில் ”பிரித்தானியா”வின் மோசமான அறிக்கை வெளியானது
2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அவதானித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம், இதனை குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையில், இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை மற்றும் எதிர்கால மீறல்களின் ஆபத்து தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் போக்குகள், தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
அத்துடன், இலங்கையில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துவதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புப் படையினர், மனித உரிமை ஆர்வலர்கள் மீது மேற்கொள்ளும் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துதல், பல தன்னிச்சையான கைதுகள் அதிகரித்துள்ளன.
நீதிமன்றக் கண்காணிப்புக்கு உட்படாத வகையில், தனிப்பட்டவர்களை கைது செய்து மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பும் அதிகாரங்களுடன் புதிய விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக பிரித்தானிய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலையாளி ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகவும், காணாமல் போனோர் அலுவலகம் போன்ற சுயாதீன நிறுவனங்களை வழிநடத்த சர்ச்சைக்குரியவர்களை நியமித்ததாகவும் பிரித்தானிய அமைச்சு தெரிவித்துள்ளது.
பல மனித உரிமை வழக்குகளில் பொறுப்புக்கூறலைத் தடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
சட்டத்துக்கு புறம்பான கொலைகளின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்த இறப்புக்கள், பொலிஸ் காவலில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தை கோடிட்டு பிரித்தானிய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமிழ், முஸ்லிம் நலன்புரி அமைப்புகள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலம் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்கிறது என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


