டியாகோ கார்சியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
இங்கிலாந்து - இந்து சமுத்திர தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயற்சித்து, ருவாண்டாவிற்கு மாற்றப்பட்ட இரண்டு இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் மூன்றாவது நாடு ஒன்றில் புகலிடம் பெறுவதற்கு இங்கிலாந்து அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ் அனுமதியானது நேற்றைய தினம் (30.03.2023) வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த 22 வயதான ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் 22 வயதான அஜித் சஜித்குமார், ஆகிய இரு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கே இந்த வாய்ப்பை இங்கிலாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது.
மேலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்று ஆவணங்களை கோடிட்டு வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் 2021 அக்டோபரில் டியாகோ கார்சியாவுக்கு சென்ற முதல் 89 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில், எஞ்சிய 68 புகலிட கோரிக்கையாளர்கள், 26 வருட உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய பிரிவினைவாத குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டவர்களும் இருப்பதாக தெ ஹியூமனிட்டேரியன் என்ற செய்தித்தளம் கூறுகிறது.
இங்கிலாந்து அதிகாரிகளால் மதிப்பீடு
இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சம் கோரும் கோரிக்கைகளை இங்கிலாந்து அதிகாரிகளால் மதிப்பீடு செய்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிராகரிப்பு கடிதங்களில் 'நீங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு உத்தரவு வழங்கப்படும்' என்ற வரிகளை கொண்டிருப்பதாக செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கைக்கு திரும்பிச்செல்லப்போவதில்லை என்று கூறி அண்மைக்காலத்தில் 9 இலங்கையர்கள் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
கோரிக்கை பரிசீலிப்பு
இந்நிலையில் அவர்களின் மூன்றாம் நாடு ஒன்றுக்கான கோரிக்கையும் பரிசீலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 18 மாதங்களாக, புகலிடக் கோரிக்கையாளர்களின் குழுவினர், தீவில் உள்ள வேலியிடப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பலர் உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.