கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல அனுமதி வழங்கிய பிரித்தானிய உயர் அதிகாரி
பிரித்தானியாவிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் குடியேற்ற மோசடியில் கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளர் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BRITISH AIRWAYS) நிறுவனத்தில் பணியாற்றிய இவர் மோசடி மூலம் சுமார் 3 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் ஐந்து வருட காலப்பகுதியில் இந்த மோசடியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் ஒரு நபரிடம் £25,000 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 97 இலட்சம்) பெற்றுக்கொண்டு விசாக்கள் இல்லாமல் இங்கிலாந்தில் இருந்து கனடாவுக்கு செல்ல உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், கனடாவுக்கு செல்வதற்கு முன்பு தற்காலிக விசாவில் இங்கிலாந்துக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு தப்பியோட்டம்
பிரித்தானியாவிலிருந்து விமானங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குள் நுழைவதைக் கவனித்த கனேடிய அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணையின் பின் அனைத்து பயணிகளும் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரே ஊழியர் மூலம் சோதனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்தநபர் ஜனவரி 6 ஆம் திகதி இங்கிலாந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்தில் உள்ள பொலிஸார் இந்திய பொலிஸாருடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.