பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலாகியுள்ள டெல்டா மாறுபாடு! - பாதிப்பு வீதம் திடீர் உயர்வு
பிரித்தானியாவில் அமுலில் உள்ள கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மறு நாளில் அங்கு கோவிட் வழக்குகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
இதன்படி, ஒரு வாரத்தில் பிரித்தானியாவில் கோவிட் வழக்குகள் 26 வீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதனையடுத்து கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 127,917 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய புள்ளிவிபரங்களின் படி, மேலும் 7,673 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,581,006 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தும் நடவடிக்கை மேலும் ஒரு மாத காலத்திற்கு தாமதப்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்றிரவு அறிவித்தார்.
இதன்படி, தற்போதைய கட்டுப்பாடுகள் ஜூலை 19ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் மேலும் பல மில்லியன் மக்கள் கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, தற்போது பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டா பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தற்போது டெல்டா மாறுபாடினால் கணிசமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பா மாறுபாடை விட டெல்மா மாறுபாடு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.