மாரடைப்பால் துடித்த அதிகாரி: காப்பாற்றிய ஸ்மார்ட் கடிகாரம்
திடீர் மாரடைப்பால் துடித்த அதிகாரியின் உயிரை ஸ்மார்ட் கடிகாரம் காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 42 வயதுடைய பால் வாப்ஹம் பிரித்தானிய நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்துள்ளார்.
அப்போது, இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகியுள்ளது. உடனே ஸ்மார்ட்வாட்ச் மூலம் தன் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார்.
தொடர்ந்து, அங்கு வந்த மனைவி அவரை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஸ்மார்ட் கடிகாரத்தின் உதவி
மேலும், அங்கு பரிசோதித்ததில் தமனியில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
உடனே அடைப்பை அகற்றுவதற்கான சிகிச்சைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் வழக்கம் போல காலை உடற்பயிற்சிகாக ஓடும் பொழுது ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு மார்பில் பெரும் வலி ஏற்பட்டது.
எனது மார்பு இறுக்கமாக இருந்தது. சாலையில் கைகள் மற்றும் முழங்கால்களை ஊன்றியபடி சரிந்தேன். இறுக்கமாக இருந்த வலி பின்னர் பிழிவதைப் போல மாறியது. என் மனைவி லாராவுக்கு போன் செய்ய என் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தினேன்.
அதிர்ஷ்டவசமாக, நான் வீட்டில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தேன். அதனால் அவள் ஓடி வந்து என்னை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றாள். வைத்தியர்கள் விரைவாகச் செயல்பட்டனர். அந்த நேரத்தில் ஸ்மார்ட்வாட்ச் பெரிதும் உதவியாக இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.