ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு FIFA விற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முன்னோக்கி கொண்டு சென்றால், அதன் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிப்போம் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நேற்று(29.07.2026) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், அதன் 55 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு
உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியமான போட்டிகளின் உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகக் கிண்ணத்தை ஒரு வணிக முதலீட்டுப் பொருளாகப் பார்க்க முடியாது.

இது கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய வரலாற்றுச் சொத்துக்களில் ஒன்றாகும். இதன் எந்தவொரு பகுதியையும் தனியார் முதலீட்டாளர்களுக்குக் விட்டுக் கொடுக்கக் கூடாது. உலகக் கிண்ணம் ஒருபோதும் விற்பனைக்கு உரியது அல்ல," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டம் கைவிடப்பட்டு, இனி வரும் காலங்களில் போட்டிகளையோ அல்லது அதன் நிர்வாகத்தையோ தனியாருக்குத் தரமாட்டோம் என்று உறுதியளிக்கும் வரை, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் எந்தவொரு தேசிய அணியும் ஃபிஃபா நடத்தும் எந்தப் போட்டியிலும் பங்கேற்காது என்றும் எச்சரித்துள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு
ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, 'ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்' (FFE) என்ற வணிகச் துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் உலகக் கிண்ணம் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கத் திட்டமிட்டிருந்தார்.
கால்பந்து அமைப்புகளுடன் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யாமல், இரகசியமாக இந்த முடிவை எடுக்க முயன்றதாக ஃபிஃபா மீது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், இந்த புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் ஃபிஃபாவிடமே இருக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறுபான்மை பங்குகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஃபிஃபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, தனது புறக்கணிப்பு முடிவில் உறுதியாக உள்ளது.