போதைப்பொருளை ஊசி மூலம் பாவிக்க முயன்ற இரு இளைஞர்கள் கைது!
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்கு வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில், ஊசி மூலம் உயிர்க்கொல்லி ஹெரோயினை செலுத்த முற்பட்ட இளைஞர்கள் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிலுள்ள போதைப்பொருள் தடுப்பு பகுதியின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்படி வீட்டை நேற்று (10.10.2022) மாலை முற்றுகையிட்டுள்ளனர்.
ஹெரோயின் வியாபாரி
வீட்டு அறையினுள் உயிர்க்கொல்லி ஹெரோயினை நுகர்வதற்கு தயாராக இருந்த 30 மற்றும் 34 வயது இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத்தவர்கள் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் போதைப்பாவனைக்கு முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் உயிர்க்கொல்லி ஹெரோயின் வியாபாரி என்று சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொருட்கள் மீட்பு
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 80 மில்லி கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயின், 2 கிராம் உயிர்க்கொல்லி ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 இன்சுலின் ஊசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் உயிர்க்கொல்லி ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த
கண்ணாடிகள், தேசிக்காய்கள் போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.



