வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு தமிழர்கள்
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (24.2.2024) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரியவந்துள்ளது.
சீன அதிகாரிகளால் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அதிகாரிகள் சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
நாடு கடத்த நடவடிக்கை
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று காலை 5.01 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |