புகையிரதங்களில் மோதுண்டு இருவர் பரிதாப மரணம்
இரு புகையிரதங்களில் மோதுண்டு இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவ்வ ரயில் நிலையத்துக்கு அருகில், கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதங்களில் மோதுண்டு நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதேவேளை, கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவு, மொரட்டுவை கொழும்பு பிரதான புகையிரத மார்க்கத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.