அநுராதபுரத்தில் வாழ்வாதாரத்திற்காக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்
அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (04.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
கெப்பித்திகொல்லாவ - பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த செனவிரத்னகே ஸ்ரீ பால (70) மற்றும் சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன (51) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பயிர்ச்செய்கை முன்னெடுப்பு
உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கெப்பித்திகொல்லாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர், இரு சடலங்களையும் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20