லண்டனில் மாபெரும் இரு பேரணிகள் ஒரே நாளில்: குவிக்கப்பட்ட 4,000 பொலிஸார்
பிரித்தானிய தலைநகர் லண்டனில், வலதுசாரி அமைப்பான 'யுனைட் தி கிங்டம்' மற்றும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சார்பில் இரு வேறு மாபெரும் பேரணிகள் ஒரே நாளில் நடைபெற்றதால் பதற்றமான சூழல் நிலவியது.
டொமி ராபின்சன் என்ற வலதுசாரித் தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தற்போதைய அரசுக்கு எதிராகவும் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
பிரம்மாண்ட பாலஸ்தீன ஆதரவு பேரணி
அதே நேரத்தில், 1948 இல் இஸ்ரேல் உருவானபோது பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததை நினைவுகூரும் 'நக்பா தினத்தை' முன்னிட்டு, மற்றொரு பிரம்மாண்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியும் லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

இரு எதிர் தரப்பு பேரணிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, லண்டன் மாநகர காவல்துறை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது.
இரு பேரணிகளுக்கும் இடையே 'பாதுகாப்பு மண்டலம்' உருவாக்கப்பட்டு, 4,000-க்கும் மேற்பட்ட பொலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். லண்டன் வரலாற்றிலேயே முதன்முறையாக, பேரணிப் பகுதிகளில் சந்தேக நபர்களைக் கண்டறிய 'நேரடி முக அங்கீகார' கெமராக்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
பிரதமர் கீர் ஸ்டார்மர்
லண்டன் ரயில் நிலையங்கள் மற்றும் பேரணிப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக மதியம் 1 மணி நிலவரப்படி 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பேரணியில் பங்கேற்க பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் வலதுசாரி சமூக ஊடக பிரமுகர் வாலண்டினா கோமேஸ் உள்ளிட்ட 11 வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பினருக்கு பிரித்தானிய அரசு தடை விதித்து திருப்பி அனுப்பியது.

"நாட்டின் அமைதியைக் கெடுக்கவும், வன்முறையைத் தூண்டவும் நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
இதே நாளில் வெம்ப்ளி மைதானத்தில் எஃப்ஏ கோப்பை (FA Cup) கால்பந்து இறுதிப் போட்டியும் நடைபெற்றதால், லண்டன் மாநகரம் முழுவதும் பொலீஸாரின் முழுமையான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.